OUR LADY OF SORROWS

அன்னை மரியாவின் துயரங்களின் நினைவு

அன்னை மரியாவின் வியாகுலங்களாக திருஅவை ஏழு தலையாய துயர நிகழ்வுகளை நமக்கு படிப்பினையாகத் தந்துள்ளது. ஆனால் அன்னை மரியாளின் வாழ்க்கை முழுவதும் பல நூறு வாள்கள் ஊடுருவப்பட்டு பல வியாகுலங்களைச் தன்னிலே சுமந்தவராய் வாழ்ந்தார். மனிதர்களின் வாழ்வில் துன்பங்களும், வேதனைகளும், கவலைகளும் இன்றியமையாத ஒன்றாகும். அதை தவிர்க்க முற்படுவது ஆகாத காரியமாகும். ஆனால் அன்னை மரியாவினுடைய துன்பமும் வேதனையும் நம் ஒவ்வொருவருடைய மீட்புக்காக என்பதிலே தான் அத்துன்பங்களின் மேன்மை அடங்கியுள்ளது.

பெண்கள் பேறுகால வேதனையுற்று குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது அவர்களுக்கு மறுபிறப்பு போன்றது என்று கூறுவர். தன் உயிரையும் பனையம் வைத்து பெண்கள் தங்கள் குழந்தையை பெற்றெடுக்கின்றனர். அவ்வாறு தன் உயிரோடு உயிராகக் கலந்த தன் மகனை தன் கண்முன்னே அவமானப்படுத்தி, துன்புறுத்தி, ஊரார் எள்ளி நகையாட சிலுவையில் அறைவது என்பது தன் உயிரை வேரோடு பிடிங்கி எடுப்பதற்கு சமமாகும். அதைக் காட்டிலும் பெரிய வேதனையை யாராலும் அளிக்க முடியாது. அன்னை மரியா அத்தகைய வேதனையையும் நம்முடைய மீட்பின் பொருட்டும் நம்மீது கொண்ட அன்பின் பொருட்டும் தாங்கிக்கொண்டார். இதன் வழியாகவே அவர் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றினார்.

புனிதர் மொழி

இதையே புனித பெர்னார்து: ‘தூய தாயே உண்மையிலேயே ஒரு வாள் உம்முடைய ஆன்மாவை ஊடுருவிற்று. ஏனெனில் உமது திரு மைந்தனின் உடலை ஊடுருவிய வாள் உமது ஆன்மாவை ஊடுருவாமல் இருக்குமோ? ஊம் திருமகன் உயிர்நீத்த பிறகு அவர் எல்லாருக்கும் சொந்தமாகிவிட்டாலும் உமக்கே சிறப்பான முறையில் அவர் சொந்தமாவார். வாள் உம்முடைய திருமகனின் ஆன்மாவைக் குத்தித் திறக்க முடியவில்லை காரணம் ஆன்மாதான் ஏற்கனவே பிரிந்துவிட்டதே. ஆனால் உமது ஆன்மாவோ பிரிக்கப்படவில்லை அதனால் வாளால் அது துளைக்கப்பட்டது. எனவே உம்மை சிறந்த மறைசாட்சி என்று கூறுவது பொருத்தமானதே. ஏனெனில் உமது உள்ளத்தில் உதித்த துன்பக் கடல் உடலில் தோன்றும் வேதனைகளை எல்லாம் விட கூடுதலாயிற்று’ என்று கூறுவார்.

ஓர் அற்புதம்

அன்னை அனுபவித்த துன்பங்களும் வேதனைகளும் நம் அனைவருக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறது. இறைவனுடைய திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக நாம் ஒவ்வொருவரும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும். 1583ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் இத்தாலியிலுள்ள மிலான் நகருக்கு வெளியே இருந்த ஆலயத்தில் வழக்கம் போல செபிப்பதற்காகச் செல்கிறார்கள். அங்கு வியாகுல அன்னையின் திருவுருவம் இருப்பதைக் கண்டு அதைப் பார்த்து செபிக்கிறார்கள். அப்போது அன்னை மரியின் திருவுருவத்திலிருந்து கண்ணீர் வடிவது போல் தோன்றவே அதனருகே சென்று பார்த்த போது அன்னையின் கண்ணிலிருந்து இரத்தம் வழிவதைப் பார்க்கிறார்கள். இதை அனைவருக்கும் தெரிவிக்கவே அனைவரும் அங்கு வந்து அதைப் பார்க்கின்றார்கள். அவர்களுள் ஒருவர் இந்நிகழ்வின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த எண்ணி அந்த இரத்தத்தை தன்னுடைய கைக்குட்டையால் துடைக்கிறார். அதைச் சோதித்துப் பார்த்த போது அது உண்மையிலேயே இரத்தம் என்பது தெரிய வருகிறது. இந்நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அப்போது பேராயராக இருந்த புனித சார்லஸ் பொரோமியோ என்பவர் அன்னை மரியாவின் இப்புதுமையை உண்மை நிகழ்வு எனப் பிரகடனப்படுத்தினார். அதன் அடிப்படையில் அன்னை மரியாவுக்கு அங்கு ஓர் ஆலயத்தை எழுப்பினார்.

அன்னை மரியாவின் ஏழு வியாகுலங்கள்

அன்னை மரியின் வியாகுலங்கள் என விவிலிய அடிப்படையில் முக்கியமான ஏழு வியாகுலங்கள் சொல்லப்படுகிறது.

1. சிமியோனின் இறைவாக்கு (லூக் 2:25-35)

மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவை எருசலேம் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கச் சென்றபோது இறைவாக்கினர் சிமியோன் குழந்தை இயேசுவைக் கையிலேந்தி, ‘இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். இவ்வாறு பலருடைய எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்’ (லூக் 2:34-35) என்று மரியாவிடம் சொல்லுகிறார். சிமியோனின் இவ்வார்த்தைகள் மரியாவின் உள்ளத்தில் முதல் வாளாக ஊடுருவியது.

2. குழந்தையைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்குத் தப்பிச்செல்லுதல் (மத் 2:13-14)

ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டருப்பதைக் கனவின் வழியாகத் தெரிந்துகொண்ட யோசேப்பு மரியாவையும் குழந்தை இயேசுவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பெத்லகேமிலிருந்து எகிப்து 600 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் பயத்தோடும், வேதனையோடும் கழித்த மரியாவிற்கு இது இரண்டாவது வாள் ஆகும்.

3. சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போதல் (லூக் 2:41-50)

இயேசு தன்னை விட்டுப் பிரிந்து கோவிலில் காணாமல் போனது மரியாவிற்கு மிகப்பெரிய வேதனை அளித்திருக்கும். மூன்றாவது வாளாகவும் அது ஊடுருவியிருக்கும்.

4. இயேசு சிலுவை சுமந்து செல்லுதல் (லூக் 23:27-31 யோவா 19:17)

கல்வாரி மலைமீது இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறக்க தீர்ப்பிடப்பட்ட போது அவருடைய பாடுகளின் பாதையில் அன்னை உடன் பயணித்த போது ஊடுவியது நான்காம் வாள்.

5. சிலுவையின் அடியில் துணை நின்றது (யோவா 19: 25-30, 41,42)

இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த போது சிலுவை அடியில் நின்று கொண்டு அவருடைய இறப்பில் நொடிப்பொழுதும் இடைவிடாது உடனின்ற போது ஊடுவியது ஐந்தாம் வாள்.

6. இறந்த இயேசுவின் உடலை மடியில் கிடத்திவைத்தல் (லூக் 23:50-54, யோவா 19: 31-37)

இறந்த மகனின் உடலை தன்னுடைய மடியில் கிடத்திய போது மாளாத் துயரில் தன் இதயத்தை ஊடுருவும் ஆறாம் வாளின் வலியை அவர் உணர்ந்தார்.

7. இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தல் (மாற் 15:40-47, லூக் 23: 50-56, யோவா 19: 38-42)

இறந்த பெற்றோர்களை பிள்ளை அடக்கம் செய்யும் நிலைமாறி, இங்கே இறந்த தன்னுடைய மகனை தாயாகிய மரியா அடக்கம் செய்கிறார். உலகமே இருண்டு போகும் அளவுக்கு ஏழாம் முறையாக துன்பம் அனுபவிக்கிறார் மரியா.

மேற்கூரிய வியாகுலங்களை நம்மீது கொண்ட அன்பிற்காகவும், இறைத்திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே அன்னை மரியா ஏற்றுக்கொண்டார். அன்னை மரியாவை நம்பாமல் அவரைப் புறக்கணிக்கக்கூடியவர்களாக இருந்தாலும், அவரின் அன்பும் அரவணைப்பும் முழுவதுமாக ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் என்பது திண்ணம். குழந்தைகள் தாயை மறந்தாலும் தாய் எவ்வாறு குழந்தைகளை என்றுமே மறப்பதில்லையோ அதே போன்று அன்னை மரியாவும் இருக்கிறார். அவருடைய வேதனைகள் அனைத்தும் அவருடைய துன்பங்களுக்கு மத்தியிலும் அவர் நம்மை நினைவில் கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது. அவர் நம்முடைய வேதனைகளை நன்கு அறிந்துள்ளார். அதனால் நமக்காக என்றும் பரிந்து பேசுகிறார். ஆகவே பல துன்பங்களை ஏற்றுக்கொண்ட அன்னை மரியாவின் பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்கு ஏற்படும் துன்பங்களும் இறைத்திருவுளத்தை செயல்படுத்தக்கூடிய கருவிகள் என்பதை மனதில் இருத்தி செயல்படுவோம். அப்போது வியாகுல அன்னையின் பரிந்துரையும் பாதுகாப்பும் நம்மோடு நிறைவாய் இருக்கும்.

வியாகுலத்தின் வழியே விழுமியமாய்

செபங்கள்:

வியாகுல அன்னையின் செபமாலை

செபமாலையின் சிலுவையில்:

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! இதோ உமது காலடியில் தென்டனிட்டு விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப்பாதையில் அனுதாபப்பட்டு வேதனையுடன் உம்மைப் பின் சென்ற உம் தாயின் கண்ணீரை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். ஓ நல்ல இயேசுவே! உமது அன்னையின் கண்ணீர் எங்களுக்குக் கற்றுத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இதயத்தில் ஏற்று, இந்த மண்ணுலகில் உமது திருவுளம் நிறைவேறவும், விண்ணகத்தில் நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கத் தகுதியுள்ளவராகச் செய்தருளும். ஆமென்.

பெரிய மணிகளில்:

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாக அன்பு செய்து, இப்போது விண்ணகத்தில் உம்மை இன்னும் அதிகமாக அன்பு செய்யும் உமது தாயின் கண்ணீரைக் கண்ணோக்கியருளும்.

சிறி ய மணிகளில்:

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது தாயான தூய கன்னி மரியாவின் கண்ணீரைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (முதலில் மூன்று முறையும், பின் கீழுள்ள மன்றாட்டைச் சொல்லி ஏழு முறை சொல்லவும்)

ஏழு மணி செப மன்றாட்டுக்கள்:
  1. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது இதயத்தை ஓர் வாள் ஊடுருவும் என்று முன்னுரைத்த சிமியோனின் வார்த்தைகளைக் கேட்டு, உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, எங்கள் துன்பத் துயர வேளைகளில் நாங்கள் விசுவாசத்திலும் உமது அன்பிலும் உறுதியோடிருக்க அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)

  2. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது தாயானத் தூய கன்னி மரியா எகிப்து நாட்டுக்கு ஓடிப் போன போது சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, எல்லா அகதிகள் மேலும், உம் மீது கொண்ட விசுவாசத்திற்காகத் துன்பத் துயரங்களையும், வேதனைகளையும் அனுபவிக்கும் அனைவர் மேலும் இரக்கமாயிரும். ( 1 பர, 7 அருள். 1 திரி.)

  3. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! மூன்று நாள்களாக உம்மைக் காணாமல் உமது தாயானத் தூய கன்னி மரியா உம்மைத் தேடியலைந்த போது சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, உம்மை இழந்த ஆன்மாக்கள் அனைவரும் மீண்டும் உம்மைக் கண்டு மீட்படைய அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)

  4. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது வேதனை நிறைந்த சிலுவைப்பாதையில் நீர் நடந்து சென்ற போது உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, நோயாலும், துன்பத் துயரங்களாலும் நாங்கள் வருந்தும் போது எங்களுக்கு ஆதரவாயிருந்து, சோதனைகளில் நாங்கள் விழுகின்ற போது நீரே வழியும், உயிரும், உண்மையும் என்பதை எங்களுக்குக் காட்ட அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)

  5. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் சிலுவையிலே தொங்கி மரண வேதனைப்படும் போது உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, மரண வேளையில் துன்பப்படும் அனைவர் மீதும் இரக்கமாயிருந்து, எங்களது மரண வேளையில் எங்களை உமது கரங்களில் அன்போடு ஏற்றுக்கொள்ள அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)

  6. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு உமது தாயின் மடியில் வளர்த்தப்பட்ட போது, அவர் சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, வேதனைப்படுகிறவர்கள் மேல் இரக்கமாயிரும். அவர்களுடைய சக்திக்கு மேலானத் துன்பங்களை நீர் அனுமதிக்க மாட்டீர் என்ற உண்மையை அவர்கள் உணரச் செய்தருளும். ( 1 பர, 7 அருள். 1 திரி.)

  7. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டபோது உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, நாங்கள் உம்மிலே உயிர்ப்போம் என்ற நம்பிக்கையால், மரண பயத்தை மேற்கொள்ள அருள் புரிவீராக. இந்த நாட்களில் உம் சுரூபங்களில் வடியும் கண்ணீருக்குப் பரிகாரமாக எங்கள் துன்பங்களையும் எங்கள் அன்பையும் ஏற்றுக் கொள்வீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)
(வாழ்க அரசியே செபத்தைச் சொல்லவும் )

OUR LADY OF SORROWS

UNDER CONSTRUCTION