அன்னை மரியாவைப் பற்றிய சிந்தனைகள்

1. இறை தந்தையின் அன்பு மகள்

இறை வார்த்தை

லூக்கா 1: 38 – பின்னர் மரியா, ‘நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்றார்.

இறைசெய்தி:

இறைவனின் அன்பு மகளாக அன்று துவங்கி இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கின்றார் நம் அன்னை மரியாள். அவளை இறைவன் மார்போடு அரவணைத்து தன் அருகிலே அமரச்செய்து அன்பு மகளாக மாற்றினார். அளவிட முடியாத பாசத்தை ஒவ்வொரு தினமும் அன்னை மரியாவுக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றார். அன்னை பெற்ற சிறப்பை இந்த மண்ணுலகில் பிறப்பெடுத்த எந்த மனிதரும் பெறவில்லை என்பது வெள்ளிடை மலை. தூயவளை இறைவன் மாசு, மறுவற்ற மனிதியாக இம்மண்ணுலகில் படைத்ததிலிருந்தே இதன் எதார்த்தத்தையும், ஆழத்தையும் நாம் அறிந்து கொள்ளலாம். எந்த பெண்டிரும் பெற்றிடாத அளப்பரிய பாக்கியத்தை இறைவன் அன்னை மரியாவுக்குக் கொடுத்தார். விண்ணுக்கும் மண்ணுக்குமான இணைப்புப் பாலமாக அன்னை மரியாவை இறைவன் மாற்றினார். ‘நான் ஆண்வரின் அடிமை’ என்று அன்னை மரியா முன்மொழிந்தது, இறைவன்மீது தான் கொண்டிருந்த அன்பை பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இதல்லவோ அப்பா மகளுக்கான உறவின் இலக்கணம். வாழ்வில் எதையுமே எதிர்பார்க்காத எதார்த்தமான, ஆனால் ஆழமான அன்பு இதிலிருந்து வெளிப்படுகின்றது.

தனிப்பட்ட தியானம்:

எனக்கும் இறைவனுக்குமான உறவு எப்படி இருக்கின்றது? என்று நாம் நம்மையே சோதித்தறிய முற்படுவோம். அன்னை மரியா போன்று என்னையும் இறைவன் அன்பு செய்கிறார் என்று என்னுடைய ஒவ்வொரு வாழ்க்கை நகர்வுகளிலும் என்னால் உணர முடிகிறதா?

இன்றைய ஒருத்தல் முயற்சி:

—————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————-

செபம்:

இறைவனுடைய புனித அன்னையே, இதோ உம்முடைய அடைக்கலம் தேடி வந்தோம். எங்கள் தேவைகளில் பாரா முகமாய் இராதேயும். விண்ணக மாட்சியடைந்த ஆசி பெற்ற கன்னியே! எல்லா ஆபத்துகளிலிருந்தும் எங்களை காப்பாற்றும். ஆமென்

(Sub tuum presidium என்கிற மிகவும் பழைமையான இச்செபம் 4ஆம் நூற்றாண்டு முதல் மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது)

புனிதர் மொழி:

அன்னை மரியாவுக்கு உங்களை உன்னதமான பரிசாக அளித்திடுங்கள். – புனித ஜான் லியோனார்தியார்

2. தூய ஆவியாரின் மாட்சி

இறை வார்த்தை

லூக்கா 1:35 வானதூதர் அவரிடம், ‘தூய ஆவி உம்மீது வரும். உன்னதக் கடவுளின் வல்லமை உன்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்’.

இறைசெய்தி:

அன்னை மரியின் வாழ்வில் தூய ஆவியாரின் வல்லமை அளப்பரிய வகையில் செயலாற்றியது. தன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நொடிப்பொழுதும் தூய ஆவியாரின் துணைகொண்டு வாழ்க்கை நிகழ்வுகளைச் சந்தித்தார். தூய ஆவியாரும் அன்னை மரியாளும் மேற்கொண்ட உடன்படிக்கை இதன் ஆழத்தை நமக்கு நன்கு உணர்த்துகின்றது. தூய ஆவியாரின் வல்லமை கொண்டு இறைமகனை கருத்தரிப்பதன் வழியாக அன்னை மரியாவில் தூய ஆவியாரின் மாட்சி மிளிர்கிறது. இறைவனின் அருளைக் கண்டடையச் செய்வதும், அன்னை மரியை நற்கருணைப் பேழையாக்கி ஆண்டவரைக் குடிகொள்ள செய்ததும், மீட்புத்திட்டத்தின் உடன்பயணியாக மாறியதும் தூய ஆவியாரின் துணையாலேயே. தூய ஆவியார் ஆட்கொண்ட தருணத்திலிருந்து துவங்கிய அன்னை மரியாவின் இறைபயணம் அன்னையின் வாழ்வின் இறுதிவரை துணைநின்றது. திருவிவிலியத்தில் இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வில் துவங்கிய உறவு, பெந்தகோஸ்து நாளில் பிளவுண்ட நாவுகள் வடிவில் அன்னை மரியாவோடு இணைத்து ஒவ்வொருவர் மீதும் இறங்கி வந்தது வரை காணக்கிடக்கிறது.

தனிப்பட்ட தியானம்:

எனக்கும் தூய ஆவியாருக்குமான உறவு என்ன? என்னுடைய வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தூய ஆவியார் துணைநிற்கின்றார் என்று நம்புகிறேனா? அன்னை மரியாவுக்கும், தூய ஆவியாருக்குமான உறவு என்னுடைய இறையனுபவத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதா?

என்னுடைய செயல்பாடு:

—————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————-

செபம்:

அருள் நிறைந்த மரியே வாழ்க, ஆண்டவர் உம்முடனே! பெண்களுக்குள் பேறுபெற்றவள் நீரே! உம் திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே! புனித மரியே! இறைவனின் தாயே! பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்

(அன்னை மரியாவுக்கு மிகவும் உகந்த திருவிவிலியத்திலிருந்து எடுக்கப்பட்ட செபம்.)

புனிதர் மொழி:

இயேசு கிறிஸ்துவின் தாயாம் அன்னை மரியாவிடத்தில் பக்தி கொண்டிராத ஒருவர் உண்மையான கிறிஸ்தவராக இருக்க முடியாது. – புனித ஜான் யூட்ஸ்

3. மீட்பரின் உடன் உழைப்பாளி

இறை வார்த்தை

லூக்கா 1: 46-47 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார். ‘ஆண்டவரை எனதுள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.’

இறைசெய்தி:

ஆண்டவரின் மீட்புத்திட்டத்தில் அன்னை மரியாளின் பங்கு அளப்பெரியது. வாழ்வின் பிறப்பு முதல் இறப்புவரை இறைமீட்புத்திட்டத்திலே தன்னை இணைத்த ஒரு மானுடர் இருப்பாரெனில் அது அன்னையாகத்தான் இருக்க இயலும் என்பது நிதர்சனமான, மறைக்கமுடியாத உண்மை. இறைவனின் அழைப்பை அன்னை மரியாள் வானதூதரின் வழியாகக் கண்டுணர்ந்த மறுகனமே தன்னால் இயன்றவரை இறைத்திட்டத்தோடு தன்னை ஒருங்கே தகவமைத்துக் கொண்டாள். வானதூதர் வாய்மொழந்த வார்த்தைகளை தன்செவிகொண்டு உய்த்துணர்ந்த மறுநொடியே இறைவனை போற்றிக் புகழத் துவங்கினார். ஆண்டவரை எனதுள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது என்று அன்னை மரியாள் சொல்வதன் காரணம் அடியேனையும் இறைத்திட்டத்தில் இணைக்குமளவு இறைவன் ஆச்சரித்திற்குரியவர் என்பதை எடுத்தியம்பும் வண்ணம் அமைந்துள்ளது. இயேசுவை இம்மணகம் காண வைத்தது அன்னை மரியாள், அவரை இறைபாதையில் வளர்த்தது அன்னை மரியாள், இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பில் அவரோடு உடனிருந்தது அன்னை மரியாள், சிதறிய சீடர்களை ஒருங்கே வரவழைத்து திருஅவையை துவங்கியது அன்னை மரியாள். இந்த நிகழ்வுகளிலிருந்து அன்னை மரியாளுக்கும் மீட்புத்திட்டத்திற்குமான தொடர்பினை நாம் தௌ;ளத்தெளிவாக அறிந்துகொள்ளலாம். தன்னை இறைமீட்பிற்காகவே அர்ப்பணித்தாள், உடன்பயணித்தாள், உழைத்தாள், உருகுலைந்தாள், உவகையெய்தினாள், இறுதியில் உன்னதமானாள்.

தனிப்பட்ட தியானம்:

இறைமீட்பு திட்டத்திற்கு என்னுடைய தனிப்பட்ட பங்கு என்ன? நானும் அன்னை மரியாளைப் போன்று வீரமாக, எத்தகைய இடர்வரினும் இயேசுவோடு உடன்பயணிக்கத் தயாரா? என் இல்லத்தில் அல்லது நான் பணிசெய்கின்ற இடத்தில் அல்லது நான் சந்திக்கின்ற மனிதர்களிடத்தில் இயேசுவின் விழுமியங்களை, நற்செயல்களை எடுத்து சொல்லி அவர்களை இறைமீட்புத் திட்டத்தில் இணைத்திட தயாரா?

என்னுடைய செயல்பாடு:

—————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————-

செபம்:

ஒ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும்; நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும்; உமது இரக்கம் யாருக்கு அதிக தேவையோ அவர்களை விண்ணக பாதையில் நடத்தியருளும்.

(அன்னை மரியா பாத்திமாவில் காட்சியளித்த போது அருளிய செபம்)

புனிதர் மொழி:

அன்னை மரியாவை அணுகாமல் அருளைப் பெறுவது என்பது இறக்கைகள் இன்றி பறக்க முயல்வதற்குச் சமம். – திருத்தந்தை 12ஆம் பயஸ்